{#1வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு } முதியோரே, இதைக் கேளுங்கள்; நாட்டில் வாழ்கிறவர்களே, எல்லோரும் செவிகொடுங்கள். உங்கள் நாட்களிலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் நாட்களிலோ, இதுபோன்று ஒன்று எப்பொழுதாவது நிகழ்ந்ததுண்டோ?
இதை உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்; உங்கள் பிள்ளைகள் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அடுத்த தலைமுறைக்கும் அதைச் சொல்லட்டும்.
குடிவெறியர்களே, விழித்து அழுங்கள்; திராட்சை இரசம் குடிப்போரே, நீங்கள் எல்லோரும் இனிப்பான திராட்சை இரசத்திற்காகப் புலம்புங்கள்; ஏனெனில் அது உங்கள் வாயிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
வலிமைமிக்கதும் எண்ணற்றதுமான வெட்டுக்கிளிக் கூட்டம் இராணுவம்போல் என் நாட்டின்மேல் படையெடுத்தது. அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்; பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்களும் அதற்கு உண்டு.
{#1மனந்திரும்புதலுக்கு அழைப்பு } ஆசாரியர்களே, துக்கவுடை உடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின்முன் பணி செய்வோரே, அழுங்கள்; என் இறைவனின்முன் ஊழியம் செய்வோரே, வாருங்கள், வந்து துக்கவுடை உடுத்தி இரவைக் கழியுங்கள். ஏனெனில் உங்கள் இறைவனது ஆலயத்திலிருந்து தானிய காணிக்கைகளும் பான காணிக்கைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.
பரிசுத்த உபவாசத்தை நியமியுங்கள்; பரிசுத்த திருச்சபையை ஒன்றுகூட்டுங்கள். முதியோரையும், நாட்டில் வாழும் அனைவரையும் உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்கு அழைப்பித்து, யெகோவாவை நோக்கிக் கதறுங்கள்.
யெகோவாவே, உம்மையே நோக்கி நான் கதறுகிறேன், ஏனெனில் வெளியின் மேய்ச்சல் நிலங்களை நெருப்பு சுட்டுப் பொசுக்கிவிட்டது; வயல்வெளியின் மரங்கள் அனைத்தையும் நெருப்புச் சுவாலைகள் எரித்துப்போட்டன.